யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதி ஒன்றில் வைத்து முதலாமாண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் பணிக்கப்பட்டமை மற்றும் மாணவர்களின் சம்மதமின்றி காணொலி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து அறிக்கையிடுமாறும், பாதிகப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகளில் இருந்து அம் மாணவர்களைப் பாதுகாக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அறிவுறுத்தியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு அறிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் மேற்கொண்ட முறைப்பாடுகள் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தேவையான அறிவுறுத்தல்களை மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கியுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் பகிடிவதைக்கு எதிரான விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.