யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழில் சட்டக்கல்வி வேண்டும்!! : விரிவுரையாளர் இளம்பிறையன்

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி மும்மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலத்தில் மட்டும் கற்கை நடத்தப்பட்டு வருகின்றது, ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் மக்களினுடைய பண்பாட்டு, பாராம்பரிய விழுமியங்களை பாதுகாக்கின்ற பல்கலைக்கழகமாக இருக்கின்ற நிலையைச் சிதைத்து, சிங்கள மாணவர்களையும் புகுத்துவதற்காக ஆங்கிலமூல கற்கைநெறி புகுத்தப்படுகின்றது.

வடக்குக் கிழக்கிலே புதிய பல்கலைக்கழகங்களை தொடங்குதல் எனும் பெயரில் ஏற்கனவே பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்குகின்ற வளாகங்களை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த விண்ணப்பிக்கும் போது அரசும் மிக அவசரமாக அதற்கு அனுமதி வழங்குகின்றது.

ஆனால் தென்பகுதியில் எந்தவொரு பல்கலைக்கழகங்களையும் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்குவதில்லை, காரணம் வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழங்களின் தமிழ் சாயத்தைத் சிதைத்து, தமிழ் பண்பாட்டை சிதைத்து, பெரும்பாண்மை சிங்கள மாணவர்களை இங்கு அனுமதிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் பல்கலைக்கழங்கள் மீதான ஏகபோகங்களை சிதைப்பதைத்தான் அரசு செய்கின்றது.

தமிழர்களுடைய தாயகபூமியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடம், முகாமைத்துவ பீடம், மற்றும் கிளிநொச்சியிலுள்ள பீடங்களில் பெரும்பான்மையாக சிங்கள மாணவர்கள் காணப்படுகின்றனர்.

எமது தமிழ் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக யாழ் பல்கலைக்கழகத்திலே தொடங்கப்பட்ட கற்கைநெறிகள் எமது மாணவர்களிற்கு வசதி கிடைக்காமல் மாற்று மாணவர்களிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது.

தமிழ்ப் பண்பாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெயரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் சகல கற்கைநெறிகளும் தமிழ்மொழியிலும் போதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். கலைப்பீட கற்கை நெறிகளைக் கூட ஆங்கில மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தினை அரசாங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக எமது பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வருகின்றது.

இருப்பினும் பாரிய எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி கைகூடாமல் இருக்கின்றது. சிங்களமொழி மாணவர்கள் பெரும்பான்மையாக இருப்பதைக் காரணம் காட்டி சிங்கள ஆளணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உருவாகி வருகின்றது. ஏன் சட்டத்துறையில் கூட சிங்கள நிரந்தர விரிவுரையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்களை நியமிக்கக்கூடாதென்று யாரும் சொல்லவில்லை, ஆனால் அது எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பாக மாறும் என்பதை நாங்கள் மறுக்க முடியாது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் என்பதற்கான அபாய எச்சரிக்கை – என தெரிவித்துள்ளார்.

Related Posts