யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் நிறைவு!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் ஆரம்பக் கட்ட வேலையுடன் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த தூபியை முழுமையாக பல்கலைக்கழக மாணவர்கள் நிறுவியுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் உறவுகள் என பலருடைய நினைவாக இந்த தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த தூபியின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவுசெய்யப்பட்டு, இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts