யாழ். பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட பீடங்கள் 13ம் திகதி மீண்டும் திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் 12ம் திகதி காலை முதல் தமது விடுதிகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெற இருந்த விஞ்ஞானபீடப் பரீட்சைகள் எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் நடைபெறும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளரினால் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தோன்றியிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் கடந்த 31ம் திகதி முதல் மூடப்பட்டிருந்தன.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்ததையடுத்து பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related Posts