யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு!

எதிர்வரும் நாட்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு நடத்துவதற்கு அனுமதி கோரி யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கான பதில் கடிதத்திலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய அனைத்து விதமான ஒன்று கூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, தங்களின் கோரிக்கையின் படி நிகழ்வை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இருப்பினும் எதிர்வரும் நாட்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது பற்றி அன்றைய நாளில் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம்.

மேலும், பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு ஆட்சேபனை ஏதுமில்லை” என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts