யாழ் பல்கலைகழக மாணவிகள் மீது பாலியல் சீண்டல்; உடன் தீர்வில்லையேல் நடவடிக்கை எடுப்போம்!!: ரெலோ எச்சரிக்கை

யாழ் பல்கலைகழகத்தில் பகிடிவதையென்ற பெயரில் வக்கிரங்கள் அரங்கேறுவது தொடர்ந்து நடந்து வந்தாலும், தமிழ்த்தேசியத்துக்கு பக்கபலமாக யாழ். பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் செயற்பட்டு வரும் பின்னணியில் பல்கலைக்கழக மட்டத்திலேயே இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான முடிவு காணப்படுமென நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும் அது தொடர்ந்து கொண்டிருப்பதால், பல்கலைகழகம் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர கடுமையான நடவடிக்கை எடுப்போம் என ரெலோ இளைஞர் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ் பல்கலைகழக புதுமுக மாணவிகள் மீது சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும், அதை படம் பிடித்த இன்னொரு மாணவி தாக்கப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ரெலோ இளைஞர் அணி சார்பில், அதன் பொதுச்செயலாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்-

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (06.04.2019) நடைபெற்ற வேளையில் புதிய மாணவிகள் சிலர் மீது பாலியல் ரீதியான சீண்டல்கள் சிரேஷ்ட மாணவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாக செய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இந்த கீழ்த்தரமான நடவடிக்கைகளை காணொளியில் பதிவுசெய்ய முற்பட்ட மாணவியொருவர் தாக்கப்பட்டதாகவும் புகார் செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழகத்தில் காடைத்தனம் அரசோச்சி கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது.

மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதும் எமது தமிழ் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை சவாலுக்கு உட்படுத்தப்படுவதுமான குறித்த சம்பவங்களை தமிழ் இனத்தின் மீது உண்மையான அக்கறைகொண்ட எவரும் கட்டாயம் கண்டித்தே ஆகவேண்டும்.

இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை உடனடியாகவே எடுத்து இனிமேல் இத்தகைய பாலியல் வக்கிரம் பல்கலைக்கழக வளாகத்துள் தலைகாட்ட முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த சில வருடங்களாக பகிடிவதை என்ற பெயரில் நடாத்தப்பட்டு வந்திருக்கும் காட்டுமிராண்டித் தனமான பல நடவடிக்கைகள் எமது கவனத்தை ஈர்த்திருந்த போதிலும் தமிழ்த்தேசியத்துக்கு பக்கபலமாக யாழ். பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக செயற்பட்டு வந்திருக்கும் வரலாற்றுப் பின்னணியில் பல்கலைக்கழக மட்டத்திலேயே இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான முடிவு காணப்படுமென நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இப்பொழுது நிலைமை கட்டுக்கடங்காமல் எங்கோ போய்விட்டது என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.

இனிமேலும் இது யாழ் பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாக மட்டும் கருதப்பட முடியாது. விடுதலை கோரி நிற்கும் எமது இனத்தின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற முகவரியுடன் ஒருசிலர் கட்டாக்காலிகள் போல காடைத்தனத்தில் ஈடுபடுவதை எமது இனம் குறிப்பாக யாழ்ப்பாண சமூகம் இனிமேலும் கைகட்டி பார்த்திருக்க மாட்டாது என்பதை அறுதியிட்டு உறுதியுடன் கூறி நிற்க எமது இளைஞர் அணி விரும்புகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தின் ஒருசில ஆண் விரிவுரையாளர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை நாங்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. இப்போதும் கூட இந்த விவகாரம் ஒருசில வேளைகளில் தலைதூக்கி வந்திருப்பதும் எமக்குத் தெரியும்.
இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு துன்பங்களுக்கு நடுவில் மிகவும் கஷ்டப்பட்டு தமது பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக கல்வியை பெருமையுடன் வழங்கும் அவர்களின் பெற்றோர்கள் உளவியல் ரீதியாகச் சந்தித்துக்கொண்டிருக்கும் பாதிப்புக்களையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்தே ஆகவேண்டும்.

ஒட்டுமொத்தமாக சொல்வதானால் இந்த பிரச்சினை தொடர்பில் தேவைப்படும் சட்டரீதியான சகல நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். தவறினால் இதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக எமது இளைஞர் அணி ஜனநாயக ரீதியாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Posts