யாழ்.பல்கலைகழக தமிழ் சிங்கள மாணவர்கள் மோதல் வழக்கு முடிவுக்கு வந்தது

யாழ்.பல்கலைகழக தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவ வழக்கு விசாரணை மாணவர்கள் பரஸ்பரம் சமாதானமாக செல்வதாக மன்றில் தெரிவித்ததை அடுத்து வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டு உள்ளது.

யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட முதலாம் வருட மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு கடந்த யூலை மாதம் 16ம் திகதி நடைபெற்றது. அந்நிகழ்வில், சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் இணைத்து கொள்ள முயன்ற வேளை தமிழ் சிங்கள மாணவர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது.

குறித்த மோதல் சம்பவத்தில் சிங்கள மாணவன் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். குறித்த மாணவன் தன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.சசீந்திரன் உள்ளிட்ட தமிழ் மாணவர்களே என பொலிசில் முறைப்பாடு செய்து இருந்தார்.

குறித்த முறைப்பாட்டினை அடுத்து மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட மாணவர் குழுவை கோப்பாய் பொலிசார் கைது செய்ய முற்பட்ட வேளை அவர்கள் நீதிமன்றில் சரணடைந்தனர்.அதனை அடுத்து குறித்த மாணவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

அதேவேளை நீதிமன்றில் சரணடைந்த தமிழ் மாணவர்கள் தம் மீது சிங்கள மாணவர்களே தாக்குதல் மேற்கொண்டனர் என பரஸ்பர முறைப்பாட்டினை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டனர்.

அதனை அடுத்து குறித்த இரு வழக்குகளும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் கடந்த 2ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தாம் பரஸ்பரம் சமாதானமாக செல்ல விரும்புவதாகவும் , அதனால் குறித்த வழக்கினை முடிவுக்கு கொண்டுவருமாறும் நீதிமன்றில் கோரினார்கள்.

அதனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை மீள பெற்றுக்கொண்டால் வழக்கினை முடிவுறுத்தலாம் என நீதிவான் தெரிவித்தார். அதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் செய்து கொண்ட முறைப்பாட்டை மீள பெற்று இருந்தனர்.

அந்நிலையில் , குறித்த வழக்கு நேற்றய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது , மாணவர்கள் முறைப்பாட்டை மீள பெற்றுக்கொண்டார்கள் என கோப்பாய் பொலிசார் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து குறித்த வழக்கினை முடிவுறுத்துவதாக நீதிவான் அறிவித்தார்.

Related Posts