யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்தவரும், இலண்டனை வசிப்பிடமாகக் கொண்டவருமான சிவலிங்கம் சிவகாந்தன் என்பவரால் சுமார் 03 லட்சம் ரூபா பெறுமதியான அதிநவீன லேசர் போட்டோப் பிரதி இயந்திரமும் நூல்களும் யாழ் பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இன்று 05.09.02014 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்.பொதுசன நூலகத்தில் பிரதம நூலகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியான முதலமைச்சர் கருத்து வெளியிடும் போது,
இன்று பல்வேறு அழிவுகளைச்சந்தித்து மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் வடமாகாணசபையும் தன்னாலான பங்களிப்பை வழங்கியே வருகின்றது. எனினும் பல்வேறு தடங்கல்களை எமது சபைக்கு தொடர்ச்சியாகவே ஏற்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக இன்றும் கூட வடமாகாண முதலமைச்சர் நிதியச் சட்ட மூலத்தை ஏற்க முடியாதென எனக்குக் கூறப்பட்டு இருக்கிறது. இவ்வாறான நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் தான் எமது புலம்பெயர் உறவான சிவகாந்தன் அவர்கள் பெறுமதியான இப்பொருட்களை வழங்கி உதவியுள்ளார்.
இது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும். இவ்வாறான வசதிவாய்ப்பும் நல்ல உள்ளமும் மிக்க புலம்பெயர் தேசத்தவர்கள் இங்கு வந்து இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
கௌரவ அதிதியான வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவிக்கும் போது,
தென்னாசியாவிலேயே மிகப்பெரிய அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்த யாழ். நூலகம் 1981 ஆம் ஆண்டு அந்நியரால் அநியாயமாகச் சிதைக்கப்பட்ட பொழுதும் , எமது மக்களின் அறிவுத்தாகத்தை எவ்விதத்திலும் மழுங்கடித்து விட முடியவில்லை.
இன்று நூலகத்தின் வளர்ச்சிக்காக எம்மாலும் ஒரு சிறு பங்களிப்பையேனும் வழங்க முடிந்தமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இன்று இந்தப் பொருட்களை தனது தனிப்பட்ட பங்களிப்பின் மூலம் வழங்கிய எமது ஏழாலை ஊரைச் சேர்ந்த சிவகாந்தன் அவர்களையும் , அவரது சேவைகளையும் நான் நன்கு அறிந்தவன்.
எமது ஊர்ப்பாடசாலைக்கு தனது தனிப்பட்ட நிதிப்பங்களிப்பில் விளையாட்டு மைதானம் உட்பட, பல்வேறு அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தந்துள்ளார்.
இதைப்போல புலம்பெயர் தேசங்களில் இருக்கக்கூடிய எமது உறவுகள் எமது மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என பகிரங்க வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன். எனத்தெரிவித்தார்.