அங்காடி வியாபாரிகளுக்கான புதிய கடைகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.யாழ். மாநகர சபையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
‘யாழ். நகரப்பகுதிகளில் அமைந்துள்ள அங்காடி வியாரிபாரிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக புதிய கடைகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது.
யாழ். வேம்படி சந்திக்கு அருகாமையில் உள்ள தனியார் காணி ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில், யாழ். நகர் பகுதியில் உள்ள 96 கடைகளுக்கு மிக விரைவில் கடைகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
அதன் பின்னர் யாழ்.நகரப்பகுதிகளில் அங்காடி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஈடுபடும் அங்காடி வியாபாரிகளின் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என யாழ்.மாநகர முதல்வர் மேலும் கூறினார்.