யாழ்.நகரிலுள்ள 3 பிரபல நிறுவனங்களுக்கு எதிராக தொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அத்திணைக்களத்தை சேர்ந்த ஐவர், புதன்கிழமை (17) திடீர் சோதனை மேற்கொண்டதாக யாழ்.மாவட்ட தொழில் திணைக்கள பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
இந் நிறுவனங்களில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி சேகரிக்கப்படாமை, பதிவேடுகள் சீரான முறையில் பேணப்படாமை போன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நிறுவன உரிமையாளர்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டதையடுத்து எச்சரிக்கை செய்யப்பட்டு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
நிறுவனங்களில் வரவு பதிவேடு, சம்பளப்பதிவேடு, விடுமுறை பதிவேடு, ஊழியர் சேமலாப நிதி போன்றவை கட்டாயம் பேணப்படவேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறான நடைமுறைகளை பேணாத நிறுவனங்கள் தொடர்பில் தகவல்கள் தந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்’ என அவர் தெரிவித்தார்.