யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (திங்கட்கிழமை) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எதிர்வரும் ஆண்டுகளுக்குள் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை சர்வதேச தரத்தினை ஒத்தவகையில் மைதானத்தை நாங்கள் புனரமைக்கவுள்ளோம்.
வடக்கில் சிறந்த ஒரு உதைபந்தாட்ட மைதானம் ஆக தற்போது யாழ் துரையப்பா மைதானம் திகழ்கின்றது.
அத்தோடு இலங்கை பூராகவும் உதைபந்தாட்ட கழகங்களை நாங்கள் புதிதாக ஆரம்பிக்க உள்ளோம். அதேபோல யாழ்ப்பாணத்திலும் புதிதாக கழகம் உருவாக்கப்படவுள்ளது.
துரையப்பா விளையாட்டு மைதானத்தில் உள்ளக அரங்கில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்.
அதனையும் தயார் படுத்துவதன் மூலம் ஏனைய மாவட்டங்களை போல வடக்கு இளைஞர்களும் தமது உதைபந்தாட்ட திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த அரசு குறித்த முயற்சிகளை முன்னெடுக்க உள்ளளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.