யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நேற்று காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத் தரைக்கீழ் நீர் மாசடைதலுக்கு முக்கிய காரணமாக வன்னீர் பிரச்சனையே காணப்படுகின்றது. அதாவது தண்ணீர் ஏனைய இடங்களை விட வன்னீராக இருக்கின்றது.
காரணம் சுண்ணாம்புப் படிவுகள் நீரில் காணப்படுதல்,மலசலகூடங்கள் மூலம் நீரில் ஈகோலி அங்கிகள் கலப்பதனால் மாசடைதல் மற்றும் நீரில் எண்ணெய் கலப்பு ஆகியவற்றால் யாழ்ப்பாணத் தரைக்கீழ் நீர் மாசடைகின்றது.அதனைத் தடுக்க வேண்டும் .
அதற்கமைய 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அளவில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று யாழ்ப்பாணம்,நல்லூர் ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவுகளின் சனஅடர்த்தி அதிகமாக உள்ள பிரதேசங்களில் மட்டும் தான் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
யாழ்-கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் யாழ்.மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் 16000 மலசலகூடங்கள்,குளியலறைகள்,மற்றும் சமையலறைக் கழிவு நீர்க்குழாய்கள் என்பன இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. இதன்மூலம் கழிவுகளின் குழாய் வலைப்பின்னல் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
குறித்த திட்டத்திற்கு 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான செலவை இலங்கை அரசு,ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரான்சிய அபிவிருத்தி முகவர் என்பன வழங்கியுள்ளது.
மேலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தலா 60,000 ரூபா செலவாகின்றது.இந்தத் தொகையில் 50வீத தொகையை அரசு பொறுப்பேற்கும் அதேவேளை மிகுதித் தொகையை ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் செலுத்த வேண்டும்.அதனைத் தவணை முறையிலும் செலுத்தலாம்.
இதேவேளை இந்தத் திட்டத்தின் சேவைக் கட்டணமாக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் ரூபா 200 மாதாந்தம் செலுத்த வேண்டும்.இதற்கு மேலதிகமாக இத்திட்டத்தில் இணைந்த பின்னர் மாதாந்தக் கட்டணமாக மாதாந்த நீர்ப்பாவனை அலகுக் கட்டணத்தின் 18வீதத்தினை கழிவகற்றல் கட்டணமாக மாதாந்தம் செலுத்த வேண்டும்.
இலங்கையிலே கொழும்பு,கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இதுவொரு புதிய திட்டமாக அமையும் என அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்விற்கு யாழ்.மாநகர சபைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த பொது அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.