யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயளிகள் சத்திர சிகிச்சையின் பின் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு சடுதியாக சிக்கலான நிலையை அடைந்தனர்.
சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பலர் பார்வையினை இழந்ததுடன், குறிப்பிட்ட சிலருக்கு கண் விழிக்கோளத்தினை வெளியில் எடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
உடனடியாக எமது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தலை குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு வழங்கி அதனைக் கடைப்பிடிக்குமாறு அறிவூறுத்தல் வழங்கினோம். ஆனால் குறித்த வைத்தியசாலையின் ஒத்துழைப்பு எங்களுக்கு பூரணமாக கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.
மேலதிகமாக சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லக்கூடிய வகையில் தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்துகின்ற சட்டங்கள் பலமில்லாத நிலையில் இருந்ததினால் நாங்கள் சில ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் மட்டும் எமது திணைக்களத்தினால் வழங்கி இருந்தோம்.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணத்துவக் குழுவினர் குறித்த தனியார் வைத்தியசாலையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கையினுடைய தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் சபை தன்னுடைய விசாரணையின் பின்னர் தமது விசாரணை தொடர்பான விளக்கங்களையும், நடந்தவை சம்பந்தமான சிபாரிசுகளையும் அறிக்கையாக எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் குறைபாடுகள் சீர் செய்யப்படும் வரைக்கும் குறித்த வைத்தியசாலையினுடைய அறுவைச்சிகிச்சை கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என அறிவித்துள்ளனர்” என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.