யாழ் தனியார் வைத்தியசாலையில் சிறுவன் உயிரிழந்தமைக்கு சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா?

யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா? என முழுமையான விசாரணையை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுவனுக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாக மருத்துவ நிபுணரால் அறிக்கையிடப்பட்டது.

அதனால் அந்தச் சிறுவன் கடந்த சனிக்கிழமை யாழிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சிறுவனுக்கு இருதய சத்திர சிகிச்சை நிபுணரால் இருதய அறுவைச் சிகிச்சையளிக்கப்பட்டது.

சிறுவனக்கு சத்திர சிகிச்சை நிறைவடைந்து வைத்தியசாலை விடுதியில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் சிறுவன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததுடன், நீதி விசாரணைக்காக யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவனிடம் அறிக்கை சமர்பித்தனர்.

அதனால் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு நேரில் சென்ற மேலதிக நீதிவான், சிறுவனின் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

சிறுவன், இருதயத் துடிப்புக் குறைவானதையடுத்து உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரின் முன்னிலையில் சிறுவனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தி, அவரது உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேலதிக நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், சத்திர சிகிச்சை வழங்கிய மருத்துவ நிபுணர், விடுதியில் வைத்து சிறுவனுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள், வைத்தியாலைப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கிய மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சிறுவனின் உயிரிழப்புக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனமா? எனக் கண்டறிந்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts