யாழ் செயலகத்தில் இயங்கிய ஆட்பதிவுத்திணைக்கள அலுவலகம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி முதல் வவுனியாவுக்கு மாற்றப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக செய்திகள் கிடைத்துள்ளது.இலங்கை ஆட்பத்திவுத்திணைக்களத்தின் உப அலுவலகம் இதுவரை யாழ் செயலகத்தில் இயங்கிவந்தது. அதன் மூலம் யாழ்மாவட்ட மக்களின் சாதாரண முறையிலான ஆட்பத்திவு விண்ணப்பங்கள் பிரதேசசெயலகங்களுக்கூடாக பெறப்பட்டு கையாளப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒருமாதத்துக்கு சுமார் 1600 விண்ணப்பங்கள் இங்கு பரிசீலிக்கப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வந்ததாக தெரியவருகிறது.
இவ்வாறு இயங்கிவந்த உப அலுவலகமே தற்போது வவுனியாவுக்கு மாற்றப்படுவதாகவும் அலுவலர்களும் மாற்றப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்ற மாதம் இவ்வாறு கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகளை பிரதேசசெயலகங்களில் நிறுத்தி வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மக்களிற்காக வழங்கப்படுகின்ற சேவைகள் பிரதேசவாரியாக பகிரப்படுவதினை மறுத்து மீண்டும் மத்தியில் நகர்த்தப்படுவதானது மக்களுக்கு மேலும் அசௌகரியத்தினை ஏற்படுத்துமே தவிர இலகுவாக்கப்பட்ட அரச சேவைகளை வழங்குவதற்கு வழிகோலாது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பல்வேறுநாடுகளில் அரசு நடவடிக்ககைகள் இணையம் வழி மக்களின் வீடுவரை சென்றுள்ள நிலையில் இலங்கையில் இருக்கின்ற சேவைகளையும் பறிக்கும் நடவடிக்ககைகளில் திணைக்களங்கள் ஈடுபடுவதை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனிக்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.