யாழ். சிறுமியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் அமைதி பேரணி!

யாழ். சுழிபுரம் மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் மன்னார் முருங்கனில் அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அமைதி பேரணி இடம்பெற்றது.

முருங்கன் வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட அமைதி பேரணி, பிரதான வீதியூடாக முருங்கன் பேருந்து தரிப்பிடம் வரை இடம்பெற்றிருந்தது.

இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்து முருங்கன் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதன்போது, ஏற்பாட்டுக்குழுவினரினால் கோரிக்கை அடங்கிய மகஜரை உரிய தரப்பினருக்கு கையளிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Posts