யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு வருவாரா மைத்திரி?

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
எனினும் இந்தக் கண்காட்சிக்கு ஜனாதிபதி வருகை தராவிட்டாலும் புதிய அரசின் அமைச்சர்களில் ஒருவர் வருகை தருவார் என தாம் எதிர்பார்ப்பதாக வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற யாழ்.வர்த்தக தொழில் மன்றத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்க யாரை அழைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான கண்காட்சி நிகழ்வாக யாழ்.வர்த்தகக் கண்காட்சி தொடர்ந்து ஆறாவது வருடமாக எதிர்வரும் 23,24,25ஆம் திகதிகளில் யாழ்.மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கான பிரதான அனுசரணையை ஸ்ரேலிங் ஓட்டோ மொபைல் நிறுவனம்
வழங்குகின்றது.

உள்ளுர் உற்றபத்தியாளர்களுக்கு தரமான காட்சிக்கூடங்கள் வழங்கப்படுவதில்லை என கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.குறிப்பாக தெற்கிலிருந்து வருபவர்கள் 75000 மற்றும் வரிகள்அறவிட்டே ஒரு காட்சிக்கூடங்களை வாடகைக்கு எடுக்கிறார்கள்.

உள்ளுர் உற்பத்திகளை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடனேயே 30000 மற்றும் வரியில்லாமல் காட்சிக்கூடம் ஒன்றை வழங்கினோம்.ஆனால் ஆரம்பகாலங்களில் கண்காட்சி நடாத்த பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணத்தை பலதரப்பினர்களுக்கு செலவழித்தே இந்தக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டது. காட்சிக்கூடங்களில் தரங்களில் வித்தியாசம் இருந்தது.

ஆனால் கடந்த ஆண்டுகளில் இருந்து குறைக்கப்பட்டு இந்த ஆண்டு தெற்கில் இருந்து வருபவர்களுக்கு என்ன வசதியான காட்சிக்கூடங்கள் அமைக்கபட்டுள்ளனவோ அதேபோல வடக்கில் இருப்பவர்களுக்கும் வசதியான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிர்மாணம்,உபசரிப்பு,உணவு,பானவகை,பொதியிடல், வாகனங்கள்,தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்,நிதியியல் சேவைகள்,ஆடைத்துறை,விவசாயம்,நுகர்வோர் உற்பத்திகள் போன்ற பலதுறைகளை உள்ளடக்கிய 250ற்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளது.

மேலும் ஒருவருக்குரிய கண்காட்சி அனுமதி நுழைவுச்சீட்டு 25ரூபாவும் பாடசாலை மாணவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts