Ad Widget

யாழ் சம்பவம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விடுத்துள்ள செய்தி

கடந்த 20ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

இரு பல்கலைக்கழகமாணவர்களின் அநியாயமானஅகாலமரணம் ஆழ்ந்ததுயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. எந்தச் சூழலில் எதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது என்பதை நாங்கள் ஆய்ந்தறிந்து கொள்ளவேண்டும். பொலிசார் தமது சமிக்ஞையை மீறி இரு இளைஞர்களும் பயணித்தார்கள் என்றபடியால் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்தார்களேயானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்தபலப் பிரயோகம் நடாத்தப்பட வேண்டும் (Use of minimum force) என்ற நிபந்தனையை மீறிவிட்டார்கள் போன்றே தெரிகின்றது.

இது பற்றி நீதவான் ஆராய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பார் என்று நம்புகின்றேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் அறிக்கை வந்துள்ளதோ என்பதை அறியேன். அவரின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் எனது கருத்தை வழங்க முடியும். எனினும் இவ்வாறான செயல்கள் இனிமேலாவது நடைபெறாது பார்த்துக் கொள்ளல் எமது கடமையாகின்றது.

இறந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரத்தில் இத் துன்பச் சூழலில் எமது இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் பொறுமை காக்க வேண்டுகின்றேன். எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts