யாழ் சம்பவத்தில் பொலிஸ் தரப்பிலேயே தவறு; எனினும் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்கலாம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அங்கு, கொள்ளைச் சம்பவங்களோ, குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களே அல்லது உயிரச்சுறுத்தல் போன்ற துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஷேடமாக அந்த சம்பவத்தை உடனடியாக அறிவிக்காமை அந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறு என்றும், அது தெளிவான விதி மீறல் செயற்பாடு என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

150வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வரையிலான காலத்தில் பெற்றோர் பட்ட கஷ்டங்களையும், இரண்டு உயிர்களின் பெறுமதியையும் நினைக்கும் போது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் குறைந்தபட்ச மற்றும் தேவையான பலத்தை பிரயோகிப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதி இருப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை சுண்ணாகம் பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பிலுத் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர்,

அந்த சந்தர்ப்பத்தில் குறித்த இரண்டு புலனாய்வு அதிகாரிகளும் சீருடையில் இருக்காத காரணத்தினால், அவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்பது அறியாமலேயே அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த 20ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Posts