யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் ஆசனப் பதிவுகள் இடம்பெறாது எனவும் யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
யாழிலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களை முற்பதிவு செய்துகொள்வதற்காக கடந்த வாரம் அதிகளவான பொதுமக்கள் புகையிரத நிலையம் வருகை தந்தனர்.
இந்நிலையில், யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட கடுகதி, கடுகதி, யாழ்.தேவி, தபால் புகையிரதம் ஆகிய ரயில்களின் இருக்கைகள் முழுவதும் முற்பதிவு செய்யப்பட்டன.
அத்துடன், யாழ் – கொழும்பு – மாத்தறை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) செல்லும் ரயிலுக்கான இருக்கைகளும் முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளன.
இதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் தொடர்ந்து வரும் 5 நாட்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காக, குறித்த ரயில்களில் மேலதிகப் பெட்டிகளை இணைப்பது பற்றி உத்தேசிக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.