அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட வடக்கு ரயில் பாதை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத பாதையின் நவீனமயப்படுத்தல் காரணமாக குறித்த சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்த வரையிலான பகுதியின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியின் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக ஜனவரி 5ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்திற்கு அந்தப் பகுதி மூடப்பட வேண்டியதாயிற்று. இதன் காரணமாக வடக்கு புகையிரதத்தின் போக்குவரத்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான பகுதி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு மூடப்படவுள்ளது. இதனால் வடக்கு புகையிரதப் பாதை மீண்டும் மஹவ வரை மட்டுப்படுத்தப்படும். கல்கமுவ, செனரத்கம, தம்புத்தேகம, தலாவ, ஸ்ரவஸ்திரி, அனுராதபுரம் புதிய நகரம், அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கடும் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.