யாழ்- கொழும்பு ரயில் சேவையால் தனியார் பேருந்து சேவைகள் பாதிப்பு- கெங்காதரன் கவலை

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பித்த பின்பு தனியார் பேருந்துச் சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தனியார் போக்குவரத்துச் சேவை பேருந்து சங்கத் தலைவர் பி.கெங்காதரன் கவலை தெரிவித்துள்ளார்.

ரயில் சேவை கட்டணம் குறைந்த அளவில் உள்ளது இதனால் அதிகளவு பயணிகளிகள் ரயிலில் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ரயிலில் 320 ரூபா 3 ஆம் வகுப்புக் கட்டணமாக அறவிடப்படுகிறது. ஆனால் தனியார் பேருந்துகள் 800 ரூபா வரை அறவிடவேண்டியுள்ளது. ஏனெனில் நாங்கள் மாதாந்தம 58 ஆயிரம் ரூபாவை வீதி அனுமதிக் கட்டணமாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அரச சொகுசு பேருந்துகளுக்கு மாதாந்தம் 58 ஆயிரம் ரூபாவை அனுமதிக் கட்டணமாக வசூலிக்கும் அதேவேளை குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்துகளுக்கு 90 ஆயிரம் ரூபாவை அறவிடுகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்துச் சேவை வழித்தட அனுமதி பெறுவதற்கு 11 இலட்சம் ரூபாவும் அரைச் சொகுசுக்கு 7 இலட்சம் ரூபாவும் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 30 பேருந்துகள் யாழ்.கொழும்பு சேவைக்கான வழித்தட அனுமதியைப் பெற்றுள்ளன ஆனால் இப்போது சுமார் 13 வரையான பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றனர். அத்துடன் யாழ்ப்பாணம் கொழும்பிற்கு 80 இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் நாம் எவ்வாறு சேவையில் ஈடுபட முடியும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Posts