யாழ்-கொழும்பு அதிசொகுசு பஸ் உரிமையாளருக்கு சிறை மற்றும் ரூபா ஒரு லட்சம்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அதிசொகுசு பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் தீர்ப்பளித்தார்.

பேருந்து உரிமையாளரின் சிறைத் தண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிமன்று ஒரு லட்சம் ரூபா தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டது. தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறின் குற்றவாளி 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்றும் மன்று கட்டளையிட்டது.

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே அதிசொகுசு பேருந்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்திடம் வழித்தட அனுமதிப் பத்திரம் இல்லை என்று பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அந்தப் பேருந்தின் உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பேருந்தின் உரிமையாளர், அப்போது தான் சுற்றவாளி என்று மன்றுரைத்திருந்தார். அதனால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் போது தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தான் குற்றவாளி என்று பேருந்து உரிமையாளர் மன்றுரைத்தார்.

இதன்போதே நீதிவான் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.

Related Posts