யாழ் குடாநாட்டு நிலத்தடி நீர் தொடர்பான கலந்துரையாடல்

8745956187_8184a481efயாழ் மாவட்டத்தின் பயண்தகு நிலத்தடி நீர் பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண ஆளுநர் ஜி ஏ.சந்திரசிறி தலைமையில் கடந்த வியாழக்கிழமை சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்றது.

யாழ்ப்பாண நீர்ப்படை ஒழுங்கு முறையில் நிலத்தடி நீர் மாசுபடுதலை ஏற்படுத்தும் இரசாயனங்களின் இயல்புகளை ஆய்வு செய்வதன் மூலம் நிலைத்து நிற்கக்கூடிய தீர்வினை மேற்கொள்ளுதல் என்னும் கருப்பொருளினை நோக்கமாக கொண்டு இவ் ஆய்வுப்பட்டறை நடாத்தப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீரைப்பயன்படுத்தும் பிரதான பங்காளிகளான வட மாகாண விவசாய அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, விவசாயத் திணைக்களம், உள்ளூராட்சி அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் கைத்தொழிலாளர்கள் இவ் ஆய்வு பட்டறையில் கலந்து கொண்டனர். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, நீர் வள முகாமைத்துவ சபையின் தலைமைப் பீட மற்றும் யாழ் பிராந்திய சபை, நீர்ப்பாசன திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும், மாவட்ட, பிரதேச செயலகங்களின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப் பிரச்சினைக்கு வேண்டிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளவும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பாகவும் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கைக்கு உதவ வேண்டுமென சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் நாயகத்திடம் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர்.ஜி.மிகுந்தன், யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளர் கலாநிதி (எந்திரி) எஸ்.எஸ்.சிவகுமார், உலக சுகாதார நிறுவன பிராந்திய ஆணையாளர் கலாநிதி.என்.சிவராஜ், யுனிசெவ் நிறுவன நீர், கழிவகற்றல் மற்றும் சுகாதார நிகழ்ச்சித்திட்ட பிரதம அதிகாரி கலாநிதி அப்டுளாய் கைகாய், யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் திரு.கே.பூரணச்சந்திரன், யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல், கழிவகற்றல் செயற்திட்ட பணிப்பாளர் எந்திரி.ரி.பாரதிதாசன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.

Related Posts