யாழ். குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது.
ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.
இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழேயே இந்த வேள்விகளுக்கான ஆடு கோழி என்பவற்றை வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுவதனால். ஆலயங்களுக்கு அத்தகைய அனுமதி வழங்குவது சரியானதா என்றும், மிருக பலி கொடுத்து வேள்வி நடத்தும் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கோவில் நடத்துகின்றார்களா அல்லது இறைச்சிக்கடை நடத்துகின்றார்களா என்றும் நீதிபதி தனது உத்தரவில் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
யாழ் குடாநாட்டின் ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலி கொடுத்து நடத்தப்படும் வேள்வியை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவமகா சபையின் தலைவர் சிவக்கொழுந்து சோதிமுத்து சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் தடையீட்டு எழுத்தாணை மனு தாக்கல் செய்திருந்தார்.
வலிகாமம் வடக்கு வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு மற்றும் கோப்பாய் பிரதேசசபைகளின் செயலாளர்கள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், தெல்லிப்பழை, சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகரிகள் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோரை இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்து ஆலயங்களில் வேள்வி நடத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், நிறுத்துவதற்கு இடைக்காலத் தடையீட்டு எழுத்தாணை பிறப்பித்து, மிருக பலி கொடுக்கும் வேள்விக்கு நிரந்தர தடையாணை ஏன் பிறப்பிக்கக் கூடாது என எதிர் மனுதாரர்களுக்கு அறிவித்தல் வழங்குமாறும் இந்த மனுவில் மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணைக்கு நீதிபதி இளஞ்செழியன் அனுமதி வழங்கியதையடுத்து வெள்ளிக்கிழமை இந்த மனு மன்ற்pல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அகில இலங்கை சைவ மகா சபையின் மனுiவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சட்டத்தரணி மணிவண்ணன் மிருகபலி கொடுக்கும் வேள்வியைத் தடை செய்வதற்கான காரணங்களை மனுதாரர் சார்பில் தனது வாதத்தில் முன்வைத்தார்.
சட்டத்தரணி மணிவண்ணன் தனது வாதத்தில் தெரிவித்ததாவது:
வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பிரதேச சபைகளின் பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்களில் எதிர்வரும் நாட்களில் வேள்வி என்ற பெயரில் ஆடு மற்றும் கோழி ஆகிய விலங்குகள் வதை செய்து கொல்லப்படுகின்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதனை எனது மனுதாரர் தெரிவிக்கின்றார். மிருக வதையானது, இலங்கையின் பல சட்டப்பிரிவுகளை மீறுகின்ற செயலாகும். மிருக வதையானது, எமது பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் மத உணர்வுகளுக்கும் சமய பாரம்பரியத்திற்கும் முரணானது.
மிருக பலிகொடுக்கும் வேள்வி நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலமும், அதைப்பற்றி கேள்விப்படுவதன் மூலமும் பலரும் உளவியல் ரீதியாக மிகமோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பிரதேச சபைகளின் அனுமதியுடனேயே மிருக பலி கொடுக்கும் வேள்விகள் நடத்தப்படுகின்றன. மிருகபலி கொடுக்கும் வேள்வியானது, இந்தப் பிரதேசங்களில் பாரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. ஆயினும், இந்தப் பிரதேசத்தின் சுகாதார நிலைமைகளுக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகளும் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரும், மிருகபலி கொடுக்கப்படும் வேள்விகளைத் தடுக்க எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
சர்வதேசரீதியாகவும் உள்நாட்டிலும் மிருக வதைக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்படகின்றன. அதேநேரம் விலங்குகளைப் பாதுகாப்பதற்காகவும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆயினும் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் இங்கு நடைபெறும் மிருக பலி கொடுக்கும் வேள்விகள் அமைந்திருக்கின்றன.
இந்த வேள்வி நடவடிக்கைகள் பொது மக்களிடையே வன்ம உணர்வையும் மிலேச்சத் தன்மையையும் வளர்த்துவிடும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஆகவே, வேள்வியைக் கட்டுப்படுத்த வேண்டிய பொதுக் கடமை எதிர் மனுதாரர்களுக்கு உள்ளது. எனவே இந்த வேள்விகளில் பலி கொடுப்பதற்காக மிருகங்களைக் கொல்வதற்கான அனுமதியை எதிர் மனுதாரர்களான அதிகாரிகள் அளிக்கக் கூடாது. இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று நீதிமன்றத்தினால் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படும் வரை, குறித்த எதிர் மனுதாரர்கள் மிருகங்களைப் பலி கொடுப்பதற்கான அனுமதி அளிக்கக் கூடாது என்று தடை விதிக்கும் தடையாணையை இந்த நீதிமன்றம் வழங்க வேண்டும். அது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி மணிவண்ணன் தனது வாதத்தில் கேட்டுக்கொண்டார்.
மனுதாரர் தரப்பிலான சட்டத்தரணியின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அதற்கான இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்து தீர்ப்பளித்தார்.
அந்த இடைக்காலத் தடையுத்தரவில் நீதிபதி இளஞ்செழியன் பல வினாக்களை எழுப்பியுள்ளார்.
கோவில்கள் இறைச்சிக் கடைச்சட்டத்தின் கீழ் இயங்குகின்றனவா? பிரதேச சபை இறைச்சிக்கடை சட்டத்தின் கீழ் கோவில்களில் வேள்வி நடத்த அனுமதியளிப்பது சட்டப்படி சரியானதா? கோவில் தர்மகர்த்தாக்கள் கோவில் நடத்துகின்றார்களா அல்லது இறைச்சிக் கடை நடத்துகின்றார்களா? பாடசாலையில், சந்தியில் மக்கள் கூடும் மைதானத்தில் ஆடு மாடு கோழி வெட்டுவதற்கு பிரதேச சபையினரும் சுகாதார பணிமனை உயரதிகாரிகளும் அனுமதி அளிக்க முடியுமா? அவ்வாறு அனுமதி வழங்குவது குற்றச்செயல் அல்லவா?
கோவில்களில் மக்கள் கூடும் விழாவில் வேள்வி என்ற பெயரில் ஆடுகோழி என்பவற்றைப் பலியெடுத்து, வெட்டி இறைச்சிகடைபோல் நடத்தி, அவற்றை அங்கிருப்பவர்களுக்கு விற்பனை செய்வது குற்றமில்லையா? இக்குற்றத்தைப் புரியும் கோவில் தர்மகர்த்தாக்கள் இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழ் மற்றும் விலங்குகளைக் கொடுமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்த முடியுமா? –
இது போன்ற கேள்விகளை தனது கட்டளையில் எழுப்பிய நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவில் தமிழ் நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக, கலாசார விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்பட்டாலும், அது சட்டப்படி விலங்கினைக் கொடுமைப்படுத்திய சட்டத்தை மீறுகின்ற செயல் என ஜல்லிக்கட்டு வழக்கிலி இந்திய உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. எனவே சட்டத்திற்கு முரணாக எந்தச் செயலையும் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, ஜல்லிக்கட்டு மிருகங்களைக் கொடுமை செய்யும் விளையாட்டு என தீர்ப்பளித்து ஜல்லிகட்டுக்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடையுத்தரவை இந்த வழக்கில் மன்று சுட்டிக்காட்டுகின்றது.
சட்டத்திற்கு முரணானது. எனவே, இந்த நீதிமன்றம் இந்து ஆலயங்களில் மிருகங்களை அறுத்து வேள்வி நடத்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கின்றது.
மிருக பலி கொடுக்கும் வேள்வி நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால்,அதற்கான அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து பிரதேச சபைகளுக்கும், சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சு செயலாளருக்கும் மன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கின்றது.
இந்த உத்தரவுக்கு முரணாக எந்த இந்து ஆலயமாவது, மிருக பலி கொடுத்து வேள்வி நடத்தினால் அவ்வாறான ஆலயங்களின் அனைத்து தர்மகர்த்தா சபை உறுப்பினர்களுக்கும் எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என நீதிபதி இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.