Ad Widget

யாழ். குடாக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லை

யாழ். குடாநாட்டுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறுதியாகத் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23 இன் கீழ் இரண்டில் யாழ். மாவட்ட குடிநீர்ப் பிரச்சினை இரணைமடு குள நீரை யாழ். குடாநாட்டுக்கு கொண்டு செல்வதில் காணப்படும் பிரச்சினைகள், பூநகரி குளங்களை ஒருங்கிணைத்தல், கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஆகியன தொடர்பாக விசேட கூற்றை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

அண்மையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் யாழ். குடாநாட்டுக்கு தேவையான நீரை இரணைமடு குளத்திலிருந்து பெற்றுக்கொடுத்தல், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தோம். இதன்போது கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இரணைமடு குளநீரைக் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். அதே நேரம் விவசாயிகளும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். அது தொடர்பிலான மாற்று வழிகள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தியிருந்தோம்.

இரணைமடு செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் ஆசிய அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் அண்மையில் எனது அமைச்சில் கலந்துரையாடியிருந்தேன். இரணைமடு குளத்துநீரை யாழ். குடாநாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லை. எனினும் தற்காலிக குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு இடைக்கால தீர்வாக கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் இத்திட்டத்தால் மீனவர் குடும்பங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. ஆகவே சுற்றாடல் அமைச்சிடம் அது தொடர்பாக ஆராய்ந்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடைய பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டு அதற்குரிய தீர்வுகள் குறித்தும் ஆராயப்படுகின்றது. அதன் அடிப்படையில் இரணைமடு குளநீரை யாழ். மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அனைவரையும் திருப்திப்படுத்தி உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அதேபோன்று பூநகரி குளங்களை ஒருங்கிணைத்து நீர்த்தேவைக்கு பயன்படுத்துவது குறித்து நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

Related Posts