வடக்கிற்கு வெளியே வாழும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வாக்காளர் இடாப்புப் பதிவில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“வடக்கிற்கு வெளியே வாழ்கின்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை வசிப்பிடமாக கொண்டு வெளி மாவட்டங்களில் வாழ்கின்ற எங்களின் மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக ஒரு அவசர வேண்டுகோளை விடுக்கின்றோம்.
அடுத்த மாதம் தேர்தல் இடாப்புக்கள் வருகின்ற போது தயவு செய்து நீங்கள் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உங்களின் வீடுகள் இருக்குமாக இருந்தால், அங்கு சென்று உங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாக்காளர் பதிவின் மூலமாக ஒரு ஆசனத்தையே கூட்டக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்ற காரணத்தினால், தயவு செய்து இதனை மிகவும் முக்கியமானதொரு பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, உங்களுடைய வீடுகளின் முகவரிகளை கொடுத்து, அங்கு உங்களை வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலே நான் கேட்டுக்கொள்கின்றேன்,” என்றார்.