யாழ் கல்வி வலயத்தின் கலாச்சார நிகழ்வும் விருது வழங்கும் வைபவமும்

student-vembadyயாழ் கல்வி வலயத்தின் கலாச்சார நிகழ்வும் விருது வழங்கும் வைபவமும் நேற்று முன்தினம் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் யாழ் வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி இந்நிகழ்வில் பிரதம விருந்திரனராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 3 மாணவர்களுக்கும், கல்வி பொது தராதர உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 68 மாணவர்களுக்கும், கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 110 மாணவர்களுக்கும், சிறந்த முறையில் கற்பித்தலில் ஈடுபட்டு சகல மாணவர்களையும் குறித்த பாடத்தில் ”ஏ” சித்தியினை பெறவைத்த 6 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும் 2012ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சையில் 80 வீதத்திற்கும் அதிகமாக கல்வி பொது தராதர உயர்தரத்திற்கு மாணவர்கள் சித்தி எய்திய யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை, யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி, இடைக்காடு மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் யாழ் கல்வி வலய பாடசாலை மாணவரக்ளின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் வை.செல்வராசா மற்றும் கல்வி உயர் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Related Posts