‘யாழ். கலாசார சீரழிவு விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் மௌனம்’ – நிஷாந்தன்

nishantahnயாழ். குடாநாட்டில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இவ்வாறான கலாசார சீரழிவுகள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டிருப்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரிந்திருந்தும் இதுவரை காலமும் எதுவிதமான நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் சாதிப்பதில் எமது கலாசார சீரழிவுக்கு ஏதோ ஒரு வகையில் அமைச்சர் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறாதா என்ற சந்தேகம் எம் மக்களுக்கு ஏற்படுகின்றது’ என யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணியின் தலைவருமான சிறிகரன் நிஷாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘யாழ்ப்பாண மாநகர சபையானது அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவின் நேரடி தொடர்பில் இருந்தும் இதுவரை காலமும் பதிவுசெய்யப்படாத விடுதிகளை மூடுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பல மேடைகளில் அமைச்சர் கூறுகின்றார் தனக்கு 15 வருட ஆயுதப் போராட்ட அனுபவமும், 15 வருட அரசியல் அனுபவமும் இருக்கிறது என்று இந்த அனுபவத்தின் மூலம் எமது தமிழ் மக்களுக்காக எதைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அதில் ஏதாவது ஒன்றையாவது கூற முடியுமா?

நான் கூறுகின்றேன் அமைச்சர் அவர்கள் 15 வருட ஆயதப் போராட்டத்திலும் சரி 15 வருட அரசியலிலும் எம் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை. எதையும் பெற்றுக்கொடுக்கவும் முடியாது. 30 வருடத்தில் சாதித்ததும் இல்லை இனி சாதிக்கப் போவதும் இல்லை. மாறாக தனது ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்காவது எதைச் செய்தார் இன்று கட்சியின் பெயரில் கட்சி வளர்ச்சிக்கு என பணமாவது உள்ளதா என்றால் அது கூட இல்லை.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியானது இன்று யாழ்ப்பாணத்தில் மட்டுமாவது ஓரளவு இருக்கின்றதென்றால் ஆரம்பத்தில் இருந்த பல தோழர்கள் இக் கட்சிக்காக உண்மையிலேயே தங்களது உயிரை நீத்தவர்கள். அவர்கள் எந்த விதமான சுயநலமில்லாது மக்களுக்கு ஏதேனும் ஒரு தீர்வை தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்று கொடுப்பார்கள் என்று நம்பி தங்களது உயிரையும் தியாகம் செய்தார்கள்.

அந்த இறந்த தோழர்களுக்காவது ஒரு கல்லறையாவது கட்டி வைத்திருக்கின்றீர்களா? இன்று அந்த தோழர்களின் குடும்பங்கள் ஒரு வேளை உணவு உண்பதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றார்கள். இவர்களது பிள்ளைகள் கற்பதற்கு முடியாமல் சிறுவயதிலேயே கூலி வேலைக்கு செல்கின்றார்கள்.

இவர்களுக்காவது ஏதாவது செய்கீறீர்களா என்றால் இல்லை கடந்த காலங்களில் உங்கள் கட்சியில் இருந்த எத்தனை தோழர்கள் வறுமையின் நிமித்தம் கட்சியை விட்டு வெளியேறி இன்று கூலி வேலை செய்கின்றார்கள்.

எனவே கட்சியையும் கட்சியினுடைய ஆரம்ப கால தோழர்களையும் கூட பார்க்க முடியாதவர் எவ்வாறு எம் மக்களையும் இவர்களுக்கான தீர்வுகளையும். எமக்கே உரித்தான கலை, கலாச்சாரம் பண்பாடுகளை பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அடிக்கடி கூறுவார், கட்சியில் 3 மாம்பழங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் பங்கு போட்டு பகிந்து கொடுகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் 14 மாம்பழங்கள் இருந்தும் அவற்றை ஏன் மக்களுக்கு பகிர்ந்த கொடுக்க முடியா என்று அடிக்கொருமுறை கூறுவார்.

அதனுடைய அர்த்தம் இப்போது மக்களுக்கு விளங்குகின்றது. 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் போதே இன்று எமது பிரதேசத்தில் நில ஆக்கிரமிப்புகளும் அடாவடித்தனங்களும் சமூக சீர்கேடுகளும் கண்மூடித்தனமாக நடைபெறகின்றன.

ஒருவேளை அமைச்சர் கூறுவது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினரும் அரசுடன் இணைந்து இருந்ததால் இன்று எமது கதி என்ன? மீதித் தமிழர்களும் உயிரிழந்து அநாதரவாகி அடிமைப்பட்டு இருப்பதற்கு எமக்கு என ஒரு பிடி மண் கூட இல்லாது அத்தழிந்து திரிந்திருப்போம்.

எமது இளம் பிள்ளைகள் தங்களது வாழ்க்கையைத் தொலைத்திருப்பார்கள். மேலும் எமது பிரதேசம் பௌத்தமயமாக்கப்பட்டு பௌத்தர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் எனவே அமைச்சர் அவர்களே உங்களுடைய 30 வருட வாழ்க்கையில் எம் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

இனிவரும் காலங்களிலாவது உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்துடனோ அல்லது தமிழர்களால் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தோ செயற்படுவதன் மூலம் உங்களாளும் தமிழ் மக்களுக்கு சிறிதளவேனும் ஒன்றை பெற்றுக்கொடுக்கலாம்.

அல்லது இன்று திட்டமிட்ட முறையில் எமது கலாச்சாரத்தை சில அன்னிய சக்திகள் சீரழித்து வருகின்றது. இவற்றையாவது ஓரளவேனும் தடுத்து நிறுத்தலாம். மாறாக தொடர்ந்தும் அரசுடன் இணைந்திருப்பதினால் உங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை அந்த அரசைப் பயன்படுத்தியும் எமக்கு என தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கப்போவதுமில்லை.

ஆகவே எது எவ்வாறாயினும் செய் அல்லது செத்து மடி என்பதுக்கு இணங்க எம் கலாச்சாரத்தைப் பாதுகாக்க எம் மக்களுடன் சேர்ந்து நானும் தயாராகத் தான் உள்ளேன். கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்தினால் அரசியல் பலம் குறைந்து விடும் என்று நினைக்காமல் எம்மக்களுக்காக பொதுநலத்தோடு இணைந்து செயற்பட வருமாறு பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இன்று மக்கள் நிற்கின்றார்கள் என்றால் இன்னால் வரையும் கூட்டமைப்பினர் சிங்கள கட்சிகளுக்கு அடி பணிந்து போவதுமில்லை இவர்களது மிரட்டல்களுக்கு பயப்பட்டு ஒதுங்குவதுமில்லை. எமது கலை, கலாசார பண்பாடுகளை யாவருக்கேனும் தாரைவார்த்துக்கொடுப்பதுமில்லை என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts