யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களில் ஐவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி இவர்கள் ஐவரும் இராணுவத்தினரால் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது எனவும் தமது பாதுகாப்புக் கருதி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று மதியம் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜிடம் தமது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், வலி. வடக்கு கட்டுவன் பிரதேசத்தில் இராணுவத்தினரால் பொதுமக்களுடைய வீடுகள் இடித்தழிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேரில் சென்று நிலைமைகளை அறியும் முகமாக நேற்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்களும் விஜயம் செய்திருந்தனர். குறித்த செய்தியை சேகரிப்பதற்காக நாமும் சென்றிருந்தோம். அங்கு உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் உள்ள வீடுகளை இராணுவத்தினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி கொண்டு இருந்தார்கள். அதனை ஊடகவியலாளர்கள் படம் பிடித்துக் கொண்டனர்.
அதனை அவதானித்த இராணுவத்தினர், அதிகாரி என அடையாளப்படுத்திய ஒருவரும் மேலும் சிலரும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஓடி வந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவருடன் நின்றிருந்தவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஊடகவியலாளர்களது படப்பிடிப்பு கருவிகளையும் பலவந்தமாக பறித்து அதில் இருந்த படங்களையும் அழித்துள்ளனர்.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக ஏதாவது படங்களோ செய்திகளோ ஊடகங்களில் வெளியானால் உங்கள் அனைவரையும் நன்றாக தெரியும் அதன் பின்னர் நடப்பதே வேறு. நாம் இராணுவ பலத்தை பிரயோகிக்க வேண்டி வரும் எனவும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளார்.
எனினும் நேற்றைய இச்சம்பவம் தொடர்பான செய்திகள், படங்கள் என்பன ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதனால் இராணுவத்தினரால் குறித்த ஊடகவியலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்பதனால் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை – சரவணபவன்