யாழ்.ஊடகங்களுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அறிவுரை

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களை மோசமாக பிரசுரிப்பதை தவிர்த்து வன்முறைக்கானதீர்வை ஊடகங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கிருத்திகா தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப்படும் விடயத்தை தவிர்த்து வன்முறைக்குள்ளான பெண்ணுக்கு உதவிகள் கிடைக்கப் பெற்றிருந்தால் அதனை பத்திரிகையில் பிரசுரித்தால் அது வன்முறைக்கான தீர்வாக அமையும். இதனை விளங்கிக் கொண்டு செயற்படுவது ஊடகங்களின் பாரிய பொறுப்பு.

குறிப்பாக தென்னிந்திய ஊடகங்கள் பெண்கள் தொடர்பான துஸ்பிரயோகங்களில் கதற கதற வன்புணர்வு போன்ற
சொற்களை பயன்படுத்துவது ஏற்றதல்ல.இவ்வாறான சொற்களை பாவிப்பதால் வன்புணர்வுக்குள்ளான பெண் பெரிதும் மனதால் பாதிக்கப்படுகின்றாள்.எனவே ஊடகங்கள் பெண்கள் மீதான வன்முறைச் செய்திகளை பிரசுரிக்கும் போது அவர்களுக்கு ஏற்பட்ட வன்முறையை வெளிக்கொணர்வதைவிடுத்து வன்முறைக்கான தீர்வை பிரசுரியுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் துஸ்பிரயோகம் ஒன்று இடம்பெற்றால் அதைச் செய்தவருக்கு விதிக்கப்படும் தண்டனை அல்லது,
அவர் மீது எழும் குற்றச்சாட்டுக்களுக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .

குறிப்பாக ஊடகத்துறையில் பெண்கள் நாட்டம் காட்டுவது குறைவு ஏனெனில் ஊடகத்துறையில் அச்சம் என்பதே காரணம்.முக்கியமாக பத்திரிகையில் அரசியல் செய்திகளை வாசிப்பதில் ஆண்களே அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.

ஆனால் பெண்கள் அழகு குறிப்பு ,சினிமா போன்ற மென்மையான செய்திகளை வாசிக்கின்றனர். ஆகவே ஊடகங்கள் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான செய்திகளை நுகரும் போது வன்முறை என்பதை விடுத்து வன்முறைக்கான தீர்வு மற்றும் துஸ்பிரயோகத்தை செய்தவருக்கு விதிக்கப்படும் தண்டனையையே பெரிதும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts