இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணியை கலைத்து விட்டதாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளபோதும், இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்று தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணியை இந்த மாதம் 5 ஆம் திகதியிலிருந்து கலைத்து விட்டதாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் ஊடக அறிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் பதிலளித்தார்.
மாவை சேனாதிராசா தெரிவித்த கருத்து தொடர்பில், செயலர் சிவகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ”வடக்கு கிழக்கில் இளைஞர் அணிகளை அமைத்ததே நான்தான்.
அதற்கு நான்தான் பொறுப்பு. ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தியே தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணியை கலைத்தேன்”. என்றார்.