தமிழகத்தின் வளசரவாக்கத்தில் இலங்கை வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் நிரோசன் (வயது 28), கடந்த சில வருடங்களாக வடபழனி, பஜனை கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, உதவி இயக்குனராக வேலை செய்து வந்தார்.
குறும் படம் ஒன்றையும் இயக்கி உள்ளார். வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் இலங்கையை சேர்ந்த ஜெகன் என்பவர் நடத்தி வரும் ஹோட்டலில் நிரோசன் தினமும் சாப்பிட செல்வார்.
இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெகனுக்கும், நிரோசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் நிரோசனிடம் உள்ள பணத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என நினைத்த ஜெகன், தீபாவளி தினத்தன்று தனது அக்கா வீடு மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில் உள்ளது. அங்கு சென்று சாப்பிடலாம் என கூறி நிரோசனை அழைத்துச் சென்றார்.
அங்கு ரவி என்பவர் நடத்தி வரும் விடுதியில் நிரோசனை அடைத்து வைத்து, ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் ரவி, தினேஷ் ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மூன்று நாட்களாக நிரோசன் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பின் அவரிடமிருந்த ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதன் மூலம் ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டனர்.
மேலும் ரூ.10 இலட்சம் பணம் கேட்டு நிரோசனை தொடர்ந்தும் தாக்கியுள்ளனர்.
ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்த நிரோசன் வளசரவாக்கம் பொலிஸ் நிலையம் சென்று தன்னை கடத்தி பணம் கேட்டு நண்பர்கள் மிரட்டுவதாக புகார் கொடுத்தார்.
அதன்பேரில் வளசரவாக்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஜெகன் (29), அவரது நண்பர்கள் ரவி (32), தினேஷ் (35) ஆகிய மூவரையும் கைதுசெய்துள்ளனர்.