நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு பாட ரீதியாக 140 செயலட்டைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு கல்லூரியின் http://www.jhc.lk/ என்ற இணைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் வகுப்புக்குரிய செயலட்டைகளை நிறைவு செய்து பாடசாலை ஆரம்பிக்கும் போது வகுப்பாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செயலட்டைகளுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவர் தேர்ச்சி அறிக்கையில் பதியப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணைய வசதியினை அணுக முடியாத மாணவர்களுக்கு வன் பிரதிகளாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அதனைப் பெற்றுக் கொள்ள தங்களது வகுப்பாசிரியர்களைத் தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் கேட்டுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இணையவழிக் கற்கை நிகழ்ச்சித் திட்டம் க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.