யாழ் இந்து மாணவன் சிங்கப்பூர் பயணமாகிறார்!!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற ‘மூளை முகாம்’ (Brain Camp) என்ற விஞ்ஞான ஆய்வு பயிற்சிக்காக இலங்கையிலிருந்து பங்குபற்றும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் தேவானந்த் அபிராம் தெரிவு செய்ப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எண்டுவெமென்ட் புரோகிராம் (STEP) என்ற அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து இந்த விஞ்ஞான ஆய்வு பயிற்சித்திட்டத்தை நடத்துகின்றன. ஜூன் 9ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதிவரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்தப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.

பத்து நாடுகள் பங்குகொள்ளும் இந்த விஞ்ஞான ஆய்வு முகாமில் முதன்முறையாக இலங்கை பங்குபற்றுகிறது. இலங்கைக் குழுவில் நான்கு பேர் அகில இலங்கை ரீதியாக தெரிவாகியுள்ளனர். ஒன்பது மகாணங்களிலிருந்தும் விஞ்ஞானத் துறையில் தேசிய மட்டத்தில் அடைவுகளை கொண்டிருந்த மாணவர்களுக்கு பல கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் இவர்கள் தெரிவாகியிருந்தனர்.

இதில் வடமகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர மாணவன் தேவானந்த் அபிராம் தெரிவாகி சிங்கப்பூர் பயணமாகிறார்.

சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எண்டுவெமென்ட் புரோகிராம் 1997ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அது அதன் 20 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கிறது. இதன் திட்டங்கள் சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள், தலைமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, விளையாட்டு மற்றும் சாதனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.

ஆசியாவில் இளைஞர்களுக்கிடையில் நட்புப்பாலத்தை உருவாக்குதல், நல்லெண்ணம், மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் அதிக கவனத்தைச் செலுத்துகிறது. இளைஞர் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவாக அதன் கவனத்தை கூர்மைப்படுத்தி வருகின்றது.

வெவ்வேறு கலாச்சாரங்கள் தமக்கிடையே தொடர்புகளை வளர்த்துக் கொள்வது , பரஸ்பரக் கற்றல் மற்றும் புரிதல், பரிமாற்றம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, சமூக மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவதனூடாக சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை வளர்க்க முயற்சிக்கிறது. ‘மூளை முகாம்’ இளைஞர்களை ஒரு பொது சமூகமாக இணைக்க மற்றும் பொது நலன்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

Related Posts