யாழ். றோட்டறிக் கழகத்தின் 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வும் நேற்று யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான ‘மாற்றத்துக்கான சாதனையாளன்” விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த இந்துவின் பழைய மாணவனும், அமெரிக்க விஞ்ஞானியும், அமெரிக்க இலியானோஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சிவலிங்கம் சிவானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் விழா ஏற்பாட்டாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஈழத்து விஞ்ஞானி சி.சிவானந்தன், மாணவர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் உரையாடியதுடன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில்களை வழங்கினார்.
இங்கு உரையாற்றி சிவானந்தன் தனது உரையில் ..
கிடைக்கும் அனுபவங்களை வாழ்வில் வெற்றிபெறுவதற்கு பயன்படுத்துங்கள்
‘வாய்ப்புக்கள் எப்போதும் இருக்கும். அந்த வாய்ப்புக்களினை இளம் தலைமுறையினராகிய மாணவர்கள் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். உங்களிற்கு பிடித்த துறையில் சாதிப்பதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும்’ என்றார்.
‘மற்றவர்கள் வைத்தியர்களாக பொறியியலாளர்களாக வருகின்றார்கள் என்பதற்காக நீங்களும் அவ்வாறு வரவேண்டும் என்பதல்ல. உங்களது விரும்பமும் முயற்சியும் எத்துறையில் உள்ளதோ அத்துறையில் சாதனை படைக்கவேண்டும்.
எத்துறையிலும் சாதனை என்பது யார் முதலில் செய்கிறார்களோ அவர்கள் தான் முதன்மையானவர்களாக விளங்குவார்கள். நீங்களும் முதன்மையானவர்களாக விளங்க வேண்டும். நாம் எதையும் தனியாக செய்யமுடியாது.
உங்களைச் சுற்றி பக்கத்திலே பெரியவர்களினை வைத்திருங்கள் அப்போது சாதனை இலகுவாக்கப்படுவதுடன் நீங்களும் வளர முடியும். எதையும் செய்யும் போது எதை விரும்புகின்றீர்களோ அதை நோக்கி நகருங்கள் உங்களது நண்பர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக செய்யாதீர்கள்’ என்று அவர் கூறினார்.
‘நான் இவ்வளவு சாதனை படைப்பதற்கும் உயர்வதற்கும் காரணமாக இருந்தது இந்த யாழ்ப்பாணத்து மண் தான். இதுவே எனக்கான ஆளுமை மாற்றத்திற்கு காரணமாக இருந்ததுடன், மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலே நான் கல்விகற்று வந்தேன்.
இப்பாடசாலைகளில் கற்ற கல்வியும் என்னை வழிப்படுத்திய ஆசிரியர்களும் எனது இத்தகைய உயர்விற்கு காரணமாக இருந்தார்கள். குறிப்பாக மட்டுவில் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர்கள் எம்மை தமது சொந்த பிள்ளைகள் போன்று வழி நடத்தினார்கள்.
அடைய முடியாதது என்று ஒன்றும் இல்லை என்பதினை இங்கிருந்தே கற்றுக்கொண்டேன். விடாமுயற்சியின் ஊடாக எதையும் அடைய முடியும் என்பதினை நான் கற்றுக்கொண்டேன். மலை ஏற வேண்டும் எனில் அம்மலையினை பார்த்து பயப்படக்கூடாது அவ் இலக்கினை நான் அடைந்தே தீருவேன் என நம்புவதுடன் விழாமல் நான் நடப்பேன்’ என யோசித்து செயற்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வடமாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் வீ.கணேசராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.