யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்ததைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி முன்னாள் அதிபர்களில் ஒருவரான சபாலிங்கம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட சபாலிங்கம் அரங்கம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் முன்னாள் அதிபர்களில் ஒருவரான க.பொன்னம்பலத்தினால் திறந்து வைகப்பட்டது.
முன்னதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் பொன்னம்பலம் தம்பதியரும், சிறப்பு விருந்தினர்களாக சபாலிங்கத்தின் புத்திரர்களான வைத்திய கலாநிதி ஜோதிலிங்கம், ஜெயலிங்கம், அபயலிங்கம் மற்றும் புதல்விகளான திருமதி கற்பகாம்பிகை புவனேந்திரராசா, திருமதி ஜெகதாம்பிகை ஆனந்த பாஸ்கரன், திருமதி கலைச்செல்வி நவேந்திரன் மற்றும் மருமக்கள் பேரப்பிள்ளைகளும் கலந்துகொண்டார்கள்.
நினைவுக்கல்லை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அதிபர் பொன்னம்பலம் திரை நீக்கம் செய்து வைக்க, மண்டபத்தை மகன் ஜோதிலிங்கம் திறந்து வைத்தார்.
விழா சிறப்பு மலரை பிரதம விருந்தினர் வெளியிட்டு வைக்க பழைய மாணவனும் யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபருமான கே.சண்முகநாதன் பெற்றுக் கொண்டார்.
அமரர் சபாலிங்கத்தின் திருவுருவுப் படத்திற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்லூரி பழைய மாணவனுமான ஈ.சரவணபவன் மலர் மாலை அணிவித்தார்.