யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை பழைய மாணவர்சங்கம் புறக்கணித்துள்ள நிலையில் இன்றைய(24) முதல் நாள் நிகழ்வுக்கு மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்ச பிரதம விருந்தினராக வந்து கலந்து கொண்டார்.யாழ் இந்துக்கல்லுரிக்கு கல்வியமைச்சர் உலங்கு வானூர்தியில் வந்திறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வினை சர்சைக்குரிய விழா இணைப்பாளர் ரங்கா , சரவணபவன் எம்பி மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ஆகியோர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் விழாவில் சிங்கக்கொடியுடன் தேசிய மலருடன் தாமரைக்குளத்தடன் நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டுள்ளது.இப்படித்தான் முத்திரை வெளியிடப்படும் எனில் அந்த முத்திரை அவசியமற்றது என்றுயாழ் பழையமாணவர்சங்க பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
முன்னைய அரசின் பங்காளியாக இருந்தவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இடம்பெற்று எம்பி பதவியை பெற முடியாமல் போன பிரஜைகள் முன்னணியின் கட்சியின் தலைவரும் சக்தி ஊடகவியலாளருமான ரங்கா புதிய அரச அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வில் முதன்மை பெறும் முதலாவது நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்ட சம்பவம் ஒன்றும் இங்கு இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரங்கா மேடையில் அமைச்சருடன் இருத்தப்பட தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான சரணவணபவான் மேடையின் கீழ் பார்வையாளர் வரிசையில் இருத்தப்பட்டார். இது பற்றி கேள்வி எழுப்பிய வேளை அமர்வின் தலைவரும் கொழும்பு பழையமாணவர் சங்க தலைவருமான அசோகன் அது சரியானதே என்று தெரிவித்ததார்.இந்த சம்பவமானது பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமை மீறப்பட்ட சம்பவமாக பார்க்கப்பட்டுள்ளது.
அமைச்சருடன் மேடையிலிருப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் அசோகனால் தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக தேசியப்பாடசாலைக்ளுக்கு ஒதுக்கப்படும் நிதியான 10 மில்லியன் ரூபாய் சென்ற வருடம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு வழங்கப்பட்டிருந்தது . இது இம்முறை யாழ் இந்துக்கல்லுாரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
125வருட கால வரலாற்றில் முதல் முதலாக யாழ்பாணம் இந்துக்கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் சிங்கள மொழியில் பிரதமவிருந்தினர் உரை இடம்பெற்றுள்ளதாக மிக மூத்த பழையமாணவர்கள் கூறினர். ஜே ஆர் ஜெயவர்த்தனா தன்னை பிரதம விருந்தினாக அழைக்கும் பட்சத்தில் குமாரசுவாமி மண்டபத்தினை கட்டித்தருவதாக கூறியிருந்த போதும் அதற்கு இடமளிக்கபடவில்லை என்றும் அது அவரது மருமகன் ஆட்சிக்காலத்தில் நிறைவேறியிருப்பதாகவும் இந்த மூத்த பழையமாணவர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய ரங்கா அவர்கள் விழா இணைப்பாளராக நியமிக்கப்பட்டு ரங்காவை முன்னிலைப்படுத்துவதால் பழையமாணவர்சங்கம் விழாவினை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இன்று வெளியிடப்பட இருந்த சிறப்பு மலரில் இணைப்பாளரின் வாழ்த்துச்செய்திகள் அடங்கிய பக்கங்கள் கல்லுாரி வீதியில் கிழித்தெறியப்பட்ட நிலையில்காணப்படுவதாக களத்தகவல்கள் தெரிவிக்கின்றன
குறைந்த எண்ணிக்கையிலான் பழையமாணவர்களே நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் .வடமாகாணசபை அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ரங்காவின் வாழ்த்துச்செய்தியுள்ள பக்கங்கள் சிறப்பு மலரில் கிழித்தெறியப்பட்டது! யாழ் இந்துக்கல்லுாரியில் சம்பவம்!