யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வுகள் சித்திரை மாதம் 02ம்,03ம,4ம் திகதிகளில் நடைபெறும் என யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்..
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கமானது வடபகுதியில் செயற்பட்டுவருகின்ற ஒரு தன்னார்வ அமைப்பாகும். இது பல வருடங்களாக வடபகுதிக்கு தனது சேவைகளை வழங்கி வருவதுடன் இச்சங்கத்தின் பிரதான குறிக்கோளிலொன்று விஞ்ஞான அறிவினை எமது பிரதேசத்தில் பரப்புதலும் மேம்படுத்துதலுமாகும்.
இதன்வழிவந்த வகையில் இவ்வாண்டு யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் “சூழல்பாதுகாப்பிற்கான புதிய வழிகளை கண்டுபிடித்தல்”(Exploring new ways for protection of environment) எனும் கருப்பொருளில் சித்திரை மாதம் 2ம்,3ம் மற்றும் 4ம் திகதிகளில் (புதன், வியாழன் மற்றும் வெள்ளி) வருடாந்த அமர்வினை யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் அமைந்துள்ள 01B உயிரியல் விரிவுரை மண்டபத்தில் நடாத்தவுள்ளது.
இவ்வருடாந்த அமர்வானது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
முதலாம் நாள் நிகழ்வு: 02.04.2014 புதன்கிழமை
முதலாம் நாள் நிகழ்வானது காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் தலைவி திருமதி.ச.ரவீந்திரன் தலைமையில் நடைபெறும். நிகழ்வில் பேராசிரியர்.கந்தையா பாலசுப்பிரமணியத்தின் தங்கப்பதக்க விருது கொழும்புப்பல்கலைக்கழகமருத்துவ பீட பேராசிரியை கிரிஸ்ரினி அரியராணி ஞானதாசனுக்கு வழங்கப்படவிருக்கிறது.அதனைத்தொடர்ந்து சிறப்பு விரிவுரைகளும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
இரண்டாம் நாள் நிகழ்வு 03.04.2014 வியாழக்கிழமை
இரண்டாம்நாள் நிகழ்வானது காலை 9.00 மணியளவில் பேராசிரியர் வி.கே.கணேசலிங்கம் தலைமையில் “சூழல் பாதுகாப்பிற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தல்” எனும் கருப்பொருளுக்கு அமைவாக கருத்துரைகள் விரிவுரையாளர்களாலும் புலமையாளர்களாலும் இடம்பெறும்.இதனைத்தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகளின் சமர்ப்பிப்புக்கள் இடம்பெறும்.
மூன்றாம் நாள் நிகழ்வு: 04.04.2014 வெள்ளிக்கிழமை
மூன்றாம் நாள் நிகழ்வானது காலை 9.00 மணியளவில் பேராசிரியா.மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெறும்.அதனைத்தொடர்ந்து வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெறும்.மாலை நிகழ்வுகள் பிற்பகல் 2.00 மணியளவில் திருமதி. ச.ரவீந்திரன் தலைமையில் இடம்பெறுவதோடு அன்றைய தினம் பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட போட்டிகளுக்குரிய பரிசில் வழங்கலும் இடம்பெறும்.
ஆர்வலர்களை கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
இவ்வாறு அவ்றிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.