யாழ். நகர்ப்பகுதியில் சில வணிக நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தமது வணிக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஏனைய வணிக நிலையங்களும் அவற்றைக் காரணம் காட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் தமது வணிக நிலையங்களையும் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகத் தெரியவருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒருசில வணிக நிலைய உரிமையாளர்களின் நடவடிக்கை காரணமாக ஒட்டு மொத்த ஊழியர்களும் விடுமுறையின்றி பாதிக்கப்படும் நிலை தோன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வழமையாக யாழ். நகரில் இயங்கும் வணிக நிலையங்களுக்குச் சனிக்கிழமை அரை நேரத்துடன் மூடவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநாள் மூடவும் யாழ். வணிகர் கழகத்தினால், நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற போதும் சனிக்கிழமை முழு நாளும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வணிக நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் பூட்டி தமது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றது.
இருந்தும் இந்த நடைமுறையைக் குழப்பும் விதத்தில் சில வணிக நிலையங்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு செயற்படும் வணிக நிலையங்களினைக் காரணம் காட்டி ஞாயிற்றுக் கிழமைகளில் தங்களது வணிக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகச் சில உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே இவ்வாறு நிலைமை ஏற்படுமானால் விடுமுறையின்றி ஒட்டுமொத்த ஊழியர்கள் பாதிக்கும் நிலை ஏற்படும் எனவே சம்பந்தப்பட்ட வணிக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடி வணிகர் கழகத்தின் நடைமுறைக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினரால் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறான நடைமுறையைக் கண்காணிக்க யாழ்.வணிகர் கழகம் முயற்சி செய்த போதும் எதுவும் கைகூடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.