இனங்களுக்கிடையிலான இந்த நல்லிணக்கமானது கட்டாயமாக நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஆனால் நாம் நல்லிணக்கம் என்று சொல்கின்றோம், பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் “நல்லிணக்கம்” என்றால் என்ன என்று தெரியாத அளவில் மக்கள் வாழ்கின்றார்கள் என தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க வாரத்தினை முன்னிட்டு, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க பிரகடனத்தினை முன்வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்.செயலகத்தில் நல்லிணக்க பிரகடனத்தினை முன்வைக்கும் நிகழ்வு நேற்று காலை அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
நாம் இந்த வருடம் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அடுத்த வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அவர்கள் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை பாடசாலைகளில் ஆரம்பித்து வைப்பதற்காக பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் விசேட நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவித்தார்.