தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில், பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல், பிரதான வாயிற் கதவுகளை மூடல் ஆகிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்களும் ஆதரவளிக்க போவதாக அறிவித்துள்ளனர். இதனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை என்பனவற்றோடு அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி போதனைசார ஊழியர்களால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்திற் கொள்ளாதமை ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.