யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (5) வழமை போன்று அவ்வறைக்கு சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் அறை கதவு மூடப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு முஸ்லீம் மஜ்லீஸ் தலைவர் எம்.றஸீனுக்கு அறிவித்துள்ளனர்.
இதன் போது அவ்விடத்திற்கு விரைந்த அவர் அறைக்கு அருகே சென்று பார்த்துள்ளார்.
அவ்வேளை ஏற்கனவே தொழுகை அறை தாக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக பாதுகாப்பு தரப்பினர் தாக்கப்பட்ட அறை கதவருகே அறிவுறுத்தல்(NOTICE) ஒட்டி சீல் செய்து சென்றிருப்பதை அவதானித்துள்ளதாக ஊடகவியலாளரும் முன்னாள் பல்கலைக்கழக மஜ்லீஸ் செயலாளருமான பாறுக் ஷிஹானிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஊடகவியலாளர் எடுத்த தகவலின் படி இந்த தாக்குதலினால் தொழுகை அறையில் இருந்த மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது விசாரணை நடாத்தப்படவுள்ளதால் தொழுகை அறையின் உள்ளே எவரும் செல்ல முடியாத வாறு பாதுகாப்பு ஊழியர்கள் தடை விதித்துள்ளனர். அத்துடன் ஊடகங்கள் பல்கலைக்கழகத்தினுள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளதுடன் பல்கலைக்கழக நிர்வாகம் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என குற்றஞசாட்டுகின்றனர்.
தற்போது வரை 650 மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் இப்பல்கலைக்கழககத்தில் கல்வி கற்று வருவதுடன் இவர்களுக்கான நிரந்திர பள்ளிவாசல் இதுவரை அமைத்து கொடுக்கப்படாமல் நிர்வாகம் பாராபட்சமாக நடந்து கொண்டு வருவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள.