2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்குத் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது 9 ஆசனங்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 ஆகக் குறைந்தது. பெரும் பாலும் புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது 5 ஆகக் குறையக் கூடும் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
2011ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதன் இறுதிகட்ட அச்சிடல் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் 2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தனர். இருப்பினும் 2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் மேற்படி தொகை ஒரு சில ஆயிரங்களால் குறைவடைந்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டபோதுஆரம்பத்தில் 2010ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையை விட 2011ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இருப்பினும் பலர் இரட்டைப் பதிவுகள் மேற்கொண்டதன் காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. மீள் பரிசீலனையின்போது அவை நீக்கப்பட்டதன் காரணமாகவே குறைவு ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.
2009ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 5 ஆகக் காணப்பட்ட வாக்காளர் தொகை 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 ஆல் குறைவடைந்து 2010ஆம் ஆண்டு 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 ஆகக் காணப்பட்டது. இந்தக் குறைவு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 இல் இருந்து 6 ஆகக் குறைவடைந்தது.
2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலிருந்து மேலும் சில ஆயிரங்கள் குறைவடைந்ததால் 2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்கு மேலும் ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைவடையவுள்ளது.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்ட வாக்காளர் தொகை குறைவாக இருப்பதனாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது