யாழ்ப்பாண ஆதீனம் அங்குரார்ப்பணம்

இலங்கையில் யாழ்ப்பாண ஆதீனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆதீனம் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதன் நிர்வாகக் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஜெயரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் இந்தியாவின் பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகள் தெரிவித்துள்ளார்.

இந்த யாழ்ப்பாண ஆதீனத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவன்கோவில், அன்னபூரணி கோயில், ராஜராஜேஸ்வரி கோயில் மற்றும் முருகன் ஆகிய கோயில்கள் செயற்படும் என்றும் மருதாசல அடிகள் குறிப்பிட்டுள்ளார்.

துமிழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே மருதாசலம் அடிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண ஆதீன நிர்வாக பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் ஜெயரத்தினமும் கலந்துகொண்டார்.

இது குறித்து மருதாசலம் அடிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்த யுத்தம் காரணமாக பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். கோயில்கள் பலவும் சேதமடைந்தன. இந்து மத, கலாசாரத்துக்கு முழு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் அங்குள்ள தமிழர்கள்தான். போர் காரணமாக அங்குள்ள தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்திலும், இந்து கலாசாரத்தை பாதுகாக்கவும் யாழ்ப்பாண ஆதீனம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆதீனத்துக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஜெயரத்தினம் நிர்வாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சிவன்கோவில், அன்னபூரணி, ராஜராஜேஸ்வரி, முருகன் ஆகிய கோவில்கள் இந்த ஆதீனத்தின் கீழ் செயல்படும்.

புதிதாக தொடங்கப்பட்டு உள்ள யாழ்ப்பாண ஆதீனத்தின் முதல் நடவடிக்கையாக அங்குள்ள தமிழர்களுக்கு ரூ.250 கோடியில் கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படுகிறது. அதன்பின்பு ஆதீனத்துக்குள் மக்கள் தங்குவதற்காக 60 அறைகளும், தியான மண்டபம், நூலகம், மருத்துவ முகாம், தமிழ்க் கல்லூரி ஆகியவை அமைக்கப்படுகின்றது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து, சைவ குருமார்களுக்கு உதவிகள், பயிற்சிகள், போரினால் நலிவுற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு காப்பகம், விதவை பெண்களின் மறுவாழ்வாதாரம், வலுவிழந்தோர் மறுவாழ்வாதாரம், முதியோர் இல்லங்களும் அமைக்கப்படும்.

பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாணம் ஒரு செழிப்பான பகுதி. நமது நாட்டு மக்கள் யாழ்ப்பாணத்துக்கு சென்றுவர இந்த ஆதீனம் உதவியாக இருக்கும்’ என்றார்.

Related Posts