யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் தெற்கு கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்க நிலை நாட்டுக்கு அப்பால் நகர்ந்து வருவதனால் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்.
இதற்கு அமைவாக வடக்கு வடமத்தி, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்பொழுது மழையுடன் கூடிய காலநிலை அல்லது இடியுடன் கூடிய காலநிலை மேலும் நீடிக்கக்கூடும்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் மெனராகலை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும்.
சப்ரகமுவ, தென், மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் வரையிலான மழை விழ்ச்சி பதிவாக கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.