யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழில் நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதாவது ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் 1201 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று யாழ்ப்பாணத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 708பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19பேர் குறித்த தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நேற்றுவரை ஆயிரத்து 253 குடும்பங்களைச் சேர்ந்த 3416 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள், அரச தனியார் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் கடைப்பிடித்து, தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தினை முடக்குவது தொடர்பாக தீர்மானம் இல்லை. ஆனாலும் அரசாங்கம், கொரோனா அச்சுறுத்தல் அதிகம் காணப்படும் மாவட்டங்களிலுள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளது.

அத்தகையதொரு நிலைமை யாழ்ப்பாணத்திலும் ஏற்படுமாயின் முடக்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts