யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் சீரமைப்பில் இந்த நிலை ஏன்?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் தார்ப்படுக்கை (காபெற்) வீதியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது.

இதில் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதியும் சீரமைக்கப்படுகின்றது.

நீண்ட காலம் சீரமத்தை எதிர்கொண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வீதியின் சீரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் ஊடாக பொன்னாலைச் சந்தி வரை இந்த வீதி சீரமைக்கப்பட உள்ளது.

இந்த வீதி யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை ஊடறுத்துச் செல்கின்றது. அதேபோன்று, யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வலி.தென் மேற்கு, வலி.மேற்கு ஆகிய பிரதேச சபைகளும் இதில் அடங்குகின்றன.

வீதி சீரமைப்பு வேலைகள் ஆங்காங்கே ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. மானிப்பாய் சந்தியில் இருந்து சங்கானை வரை வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் ஆரம்ப வேலைகள் முடிவடைந்து காபெற்று இடும் பணி மட்டுமே எஞ்சியிருக்கின்றது.

மிகக் கவலையான விடயம் என்னவெனில், இந்த வீதிப் சீரமைப்பின்போது வீதி அகலிக்கப்படவில்லை என்பதுடன் வீதியில் உள்ள மதகுகள் மீள அமைக்கப்படாமல் அவற்றுக்கு மேலாக தார்ப்படுக்கை வீதி அமைக்கப்படுகின்றது.

ஏற்கனவே சேதமடைந்து அடுத்த சில வருடங்களிலேயே இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ள மதகுகளைக்கூட மீள அமைக்காமல் அவற்றுக்கு மேலாக தார்ப்படுக்கை இடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அருகில் இடம் இருக்கும் இடங்களில் மட்டும் வீதி அகலமாகவும் ஏனைய கடைத்தொகுதிகள், இதர கட்டடங்கள் உள்ள இடங்களில் ஒடுக்கமாகவும் வீதி சீரமைக்கப்படுகின்றது.

வீதியோரம் இடையூறாக நிற்கும் மரங்கள்கூட தறிக்கப்படவில்லை. ஏனைய இடங்களில் குறிப்பாக, பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி, பருத்தித்துறை வீதி போன்றன சீரமைக்கப்பட்ட போது மக்கள் கட்டடங்களை பின்னகர்த்தி வீதிப் சீரமைப்பிற்கு இடமளிக்கவில்லை. இதனால் சீரமைப்பிற்கு தடை ஏற்பட்டது.

எனினும், தொடர்ச்சியாக மக்களுக்கும் வர்த்தகர்கள் மற்றும் இதர தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் அவர்கள் தமது கட்டடங்களை பின்னகர்த்தி இடமளித்தனர்.

இன்று குறித்த வீதிகள் போக்குவரத்திற்கு மிக சிறந்தவையாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்த வேலைத்திட்டம் யாழ்ப்பாணம் -மானிப்பாய் – பொன்னாலை வீதிப் சீரமைப்பின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், வீதியின் ஆரம்ப சீரமைப்பு இடம்பெற்று தார்ப்படுக்கை இடுகின்ற வேலை நடைபெற்று வரும் நிலையில் – தற்போது – வலி.தென்மேற்கு பிரதேச செயலகம் ஆங்காங்கே சில கூட்டங்களை நடத்தி மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வலி.மேற்கு பிரதேச செயலகமும் இதற்கான சில கூட்டங்களை நடத்தியிருக்கின்றது.

மானிப்பாய் மற்றும் சங்கானை போன்றன எதிர்காலத்தில் நகர சபைகளாக தரம் உயர்த்தக்கூடிய நிலையை எட்டியுள்ளன. ஆனால், இந்த நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

சாதாரண நாள்களிலேயே இங்கு சனநெரிசல் அதிகமாக உள்ளது. பண்டிகை காலங்களில் போக்குவரத்துச்செய்ய முடியாமல் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக வர்த்தகர்களும் மக்களும் விழிப்பூட்டப்படவேண்டும். குறிப்பாக, மானிப்பாய், சங்கானை வர்த்தக சங்கங்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுக்கவேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, மதகுகள் மீள அமைக்கப்படாமை தொடர்பாக உடனடியாக கரிசனை செலுத்தப்படவேண்டும். வலி.தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பிரதானமான ஆறு மதகுகள் எந்தவித சீரமைப்போ அல்லது மீள அமைக்கப்படாமல் அதற்கு மேலாக தார்ப்படுக்கை இடப்படக்கூடிய நிலைக்கு சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.

மானிப்பாய் – பொன்னாலை வீதியில் மானிப்பாய் சந்திக்கு சமீபமாக உள்ள மதகு, கட்டுடைச் சந்தியில் உள்ள மதகு, மற்றும் சண்டிலிப்பாய் சந்திக்கு சமீபமாக ஐந்துகண் மதகுக்கு அருகே உள்ள இரு மதகுகள், மேலும் சண்டிலிப்பாய் – சங்கானை வீதியில் ஐயனார் சிலையடிக் சமீபமாக இரு மதகுகள் என்பன மீள அமைக்கப்படவில்லை. ஆறு மதகுகளும் பெருமளவில் சேதமடைந்த நிலையிலேயே உள்ளன. அடுத்துவரும் சில ஆண்டுகளில் மதகுகள் இடிந்துவிழக்கூடிய அபாயம் உள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பெரு வீதிகள் சீரமைப்பின்போது மதகுகளும் மீள அமைக்கப்படுவதனை சேர்த்தே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழையானது. யாழ்ப்பாணத்தில் தார்ப்படுக்கை வீதியாக சீரமைக்கப்பட்ட அத்தனை வீதிகளிலும் ஒரு மதகுகூட மீள அமைக்கப்படாமல் விடப்படவில்லை.

ஆனால், மேற்படி வீதியில் உள்ள மதகுகளை மீள அமைக்கப்படாமல் அதற்கு மேலாக தார்ப்படுக்கை இடப்படும் செயற்பாடு இடம்பெறுவது மோசடியானது.

இதுவரை இவ்வாறு ஆறு மதகுகள் மீள அமைக்கப்படவில்லை. இதன்மூலம் மக்கள் வெளிப்படையாக ஏமாற்றப்பட்டு எங்கோ உயர் மட்டத்தில் பெரும் நிதி மோசடி இடம்பெறுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விடயம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வலி.தென்மேற்கு பிரதேச சபையில் பேசுபொருளாக இருந்தது. கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் த.கஜதீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமைகளை அவதானித்தனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட வீதிப் சீரமைப்புடன் சம்பந்தப்பட்ட பொறியியலாளர்கள் நிலமையை சமாளித்துவிட்டுச் சென்றனர்.

கிராமிய வீதிகளை சீரமைக்கும் திட்டத்தின் கீழேயே இந்த வீதி சீரமைக்கப்படுகின்றது எனவும் ஆறு மாதங்களுக்குள் இத்திட்டத்தை முடிவுறுத்த வேண்டும் என்பதால் இப்போது மதகுகளை அமைக்காமல் வேலைகள் முடிவடைந்த பின்னர் அமைத்துத் தருவோம் என அவர்கள் கூறினர். முதற்கட்டமாக அதற்குரிய சில பணிகளை இப்போதே தாம் முன்னெடுப்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

உயர் அதிகாரிகளின் இந்த உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிப்பதும் காலதாமதம் ஆகுமெனில் காலத்தை நீட்டிப்பதற்கும் பல வழிகள் உள்ளன.

ஆனால், காலத்தைக் காரணம் காட்டி அரைகுறை அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அரச தரப்பு அமைச்சர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆகியோரும் இவ்விடயத்தில் அக்கறை இன்றி இருப்பதாகவே தெரிகின்றது.

தினமும் அதிகமான மக்கள் பயணிக்கும் பெரு வீதி ஒன்றை அரைகுறையாக சீரமைப்பதற்கு அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உள்ளுர் அரசியல்வாதிகளான பிரதேச சபை உறுப்பினர்கள் தற்றுணிபுடன் செயற்பட வேண்டும்.

குறிப்பாக, வலி.தென் மேற்கு, வலி.மேற்கு ஆகிய பிரதேச சபைகள் தமக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டும்.

அபிவிருத்தி என்பது மக்களுக்கானதே அன்றி அதிகாரிகளுக்கோ அரசியல்வாதிகளுக்கோ உரியதல்ல. எனவே, பாலங்கள், மதகுகள் அனைத்தையும் முழுமையாக மீள அமைக்கப்பட்டு முடித்த பின்னர் வீதியை சீரமைக்குமாறு உயர் மட்டத்தினருக்கு மக்கள் இடித்துரைக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கானோர் தினமும் சென்றுவரும் வீதியில், வெளிப்படையாக பெரும் மோசடி இடம்பெறுவதை தடுத்து நிறுத்தவில்லையாயின் அனைவரும் குற்றவாளிகளே.

என்.பிருந்தாபன்,
பொன்னாலை.

Related Posts