யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகள்

யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், மற்றும் வீட்டுப் பயனாளிகளும் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோர் மாதம் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. இலங்கை இராணுவம் மற்றும் பாதுகாப்பு பிரிவு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு வீட்டிற்காக சுமார் 9 இலட்ச ரூபா செலவிடப்படுகிறது. 540 சதுர அடி அளவில் வீடுகள் அமைக்கப்படுகின்றன. இந்த வீடுகள் சமயலறை, படுக்கை அறை, உணவு அறை, குளியலறை ஆகியவற்றை கொண்டிருக்கும். ஒரு வீட்டுக்காக 20 பேர்ச் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்தில் பொது மண்டபம் ஒன்று, விளையாட்டு அரங்கு, சிறுவர்களுக்கான கல்வி மத்திய நிலையம் ஒன்று, வர்த்தக கட்டடத் தொகுதி ஒன்றும் அமைக்கப்படவுள்ளன.

மின்சாரம், மற்றும் குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளது. இந்த வீடமைப்பு திட்டப் பணியில் 50 சதவீதமான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. சிவில், இராணுவ ஒன்றிணைப்புடனான புதிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும். இந்த திட்டம் ஐந்து கட்டங்களின் கீழ் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related Posts