போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே உள்ளதாக ‘த டிப்ளொமெட்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிய நிகழ்வை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டனர்.
இதன்பின்னர் பல மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தொடர்ந்தும் யாழ்ப்பாண பிரதேசம் பதற்றத்துடன் செயற்பட்டு வருவதாக த டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு பின்னர் 1956ம் ஆண்டு சிங்கள தலைவர்களால் சிங்களம் மட்டுமே என்ற சட்டம் கொண்டு வரப்பட்டமையை அடுத்து தமிழர்களின் மொழி உரிமைகள் உட்பட்ட உரிமைகள் நசுக்கப்பட்டன.
இதன் காரணமாக தமிழர்களின் போராட்டம் ஆரம்பமானது. இதன் விளைவாக 1983 ஆம் ஆண்டு நாட்டில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்டன.
இதன்பின்னர் கடந்த 30 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது.
இந்தநிலையில் போரில் இறந்துப்போன விடுதலைப்புலிகளை நினைவுகூருவதை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கையாக கருதி அதனை அடக்கி வருகிறது.
அதன் விளைவாகவே இன்று யாழ்ப்பாணத்தில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் இலங்கைப் படையினரும் அதிகளவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக த டிப்ளொமெட் தெரிவித்துள்ளது.